இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு யுஏஇயின் உயரிய விருது!
ஜெருசலேம்: 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றும் வகையில் விமானத்தைத் தரையில் மோதச் செய்யும் சதியைத் தடுத்ததாகக் கூறப்படும் இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து 174 பயணிகளுடன் இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தில், துணை விமானி விமானத்தைத் தரையில் மோதச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க ஸ்மித் மச்சார் துணை விமானியுடன் போராடி, பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தின்போது பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்குப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதை வழங்குவதாக அறிவித்தது. மேலும், இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபம் ஏற்றவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுமக்கள் துணிச்சல் விருதும் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஸ்மித் மச்சாருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருதான ‘முதல் வகுப்பு சயீத்’ விருது வழங்கப்பட்டது. துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் இந்த விருதை வழங்கிக் கவுரவித்தார்.
மேலும், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் ஸ்மித் மச்சாரையும் விமானக் குழுவினரையும் நேரில் அழைத்து, அவர்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினர்.
