தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் சிக்கினர்!
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளும் தற்போது பிடிபட்டுள்ளனர்.
இந்தச் சிறையில் மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணைக் கைதிகள் உட்பட மொத்தம் 334 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையின் மூன்றாவது பிளாக்கில் மட்டும் 92 கைதிகள் இருந்தனர்.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி இரவு 10 மணியளவில், முத்து இளங்கோவன் (23) என்பவர் வலிப்பு ஏற்பட்டது போல் நடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த சிறைக் காவலர்கள் மதன்மோகன், ஸ்டாலின் பிரபு, தங்கபாண்டி ஆகியோரை 17 கைதிகள் தாக்கிவிட்டு சிறையிலிருந்து தப்பினர்.
இதையடுத்து தப்பிய கைதிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 15 கைதிகள் பிடிபட்ட நிலையில், மீதமிருந்தவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில், அமச்சியாபுரம் மலைப்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரெஜின் மற்றும் மதுரையைச் சேர்ந்த பொன் முத்து செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், மீதமிருந்த சகோதரர்கள் இருவரும் கம்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதன் மூலம் தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிபட்டுள்ளனர்.
