ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 114 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை
நகோயா: ஜப்பானின் ஐச்சி–நகோயா நகரில் நடைபெற்று வரும் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியா 114 பதக்கங்களைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. போட்டியின் 6-வது நாள் முடிவில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தது.
பாட்மிண்டன்
ஆடவருக்கான ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நிதேஷ் குமார், 21-18, 21-16 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பிரமோத் பகத்தை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார். கடந்த இரண்டு முறை தங்கம் வென்ற பிரமோத் பகத் இம்முறை வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.
துப்பாக்கி சுடுதல்
மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் மோனா அகர்வால் 357.5 புள்ளிகளைக் குவித்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் ஸ்வீடனின் அனா பென்சன் 356 புள்ளிகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
நடப்பு தொடரில் மோனா அகர்வால் வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவிலும் அவர் தங்கம் வென்றிருந்தார்.
வில்வித்தை
ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங், விஜய் சுந்தி ஜோடி 5-1 என்ற கணக்கில் சீனாவின் யுன் டுவோ, ஜாவோ லிக்ஸ்யூ ஜோடியை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றது.
மகளிருக்கான அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பாவ்னா சவுத்ரி, பூஜா ஜத்யான் ஜோடி 0-6 என்ற செட் கணக்கில் சீனாவின் காவோ ஸிஹான், வாங் சூச்சியான் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
தடகளம்: உலக சாதனைகளுடன் தங்கம்
ஆடவருக்கான 400 மீட்டர் டி.64 பிரிவில் இந்தியாவின் சந்தீப் 52.28 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். சவுதி அரேபியாவின் நூர் அல்சனா 53.13 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், இந்தியாவின் அஜய் குமார் 53.61 விநாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் எஃப்.37/38 பிரிவில் இந்தியாவின் ஹேனி 60.49 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
மகளிருக்கான நீளம் தாண்டுதல் டி.47 பிரிவில் இந்தியாவின் நிமிஷா 5.37 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பிரமோத் பிஜார்னியா 4 நிமிடங்கள் 9.65 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
டேபிள் டென்னிஸ்
ஆடவருக்கான இரட்டையர் எம்.டி.4 பிரிவில் இந்தியாவின் ஜெஹன் டோரப் மதன், ஷுபம் வாத்வா ஜோடி, கடைசி ஆட்டத்தில் தென்கொரியாவின் பார்க் ஜின்சியோல், கிம் கியுங் ஹியுன் ஜோடியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து இந்திய ஜோடி வெண்கலப் பதக்கம் பெற்றது. ஜெஹன் டோரப் மதன் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளப் த்ரோ மற்றும் ஈட்டி எறிதல்
ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப்.51 பிரிவில் இந்தியாவின் பிரணவ் சூர்மா 32.87 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான தரம்வீர் 27.71 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் எஃப்.42-44/61-64 பிரிவில் இந்தியாவின் சுமித் அண்டில் 72.46 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
114 பதக்கங்களுடன் இந்தியா புதிய சாதனை
நேற்றைய நாள் முடிவில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருந்தது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை குவித்த அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும்.
இதற்கு முன்பு, 2023-ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 106 பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
நிறைவு விழாவில் தேசியக் கொடியை ஏந்தும் மோனா, நிஷாத்
ஜப்பானின் ஐச்சி–நகோயா மாகாணத்தில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல துப்பாக்கி சுடுதலில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற மோனா அகர்வால் மற்றும் உயரம் தாண்டுதலில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற நிஷாத் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
