திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து
மும்பை: திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்று மகாராஷ்டிரா மதமாற்றச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது மும்பை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் 2026-ஆம் ஆண்டின் மதச் சுதந்திரச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கட்டாயப்படுத்துதல், மோசடி, வற்புறுத்தல், தூண்டுதல், தவறான தகவல்களை அளித்தல் மற்றும் திருமணம் உள்ளிட்ட வழிகளில் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களை இந்தச் சட்டம் குற்றமாகக் கருதுகிறது.
மேலும், இந்தச் சட்டத்தின் 6-வது பிரிவின்படி, மதம் மாற விரும்பும் நபர்கள் 60 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு அளிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
சட்டத்தை எதிர்த்து மனு
இந்நிலையில், தானே பகுதியைச் சேர்ந்த 70 வயது முஸ்லிம் மத போதகர் ஒருவர், இந்தச் சட்டத்தை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேஷ் சி. திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள மதச் சுதந்திரம் மற்றும் மதத்தைப் பரப்புவதற்கான உரிமையை இந்தச் சட்டம் கட்டுப்படுத்துவதாக வாதிட்டார்.
நீதிபதிகள் கருத்து
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சமூகத்தின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்கவும், கட்டாயப்படுத்துதல் மூலம் மேற்கொள்ளப்படும் மதமாற்றங்களைத் தடுக்கவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
ஒவ்வொருவருக்கும் தங்களது மதத்தை மாற்றிக்கொள்ளும் சுதந்திரம் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுதாரர் தனது மனுவைத் திரும்பப் பெற்றார்.
