சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
ரியாத்: சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 8 பேர் காயமடைந்தனர்.
சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான தம்மாமில் கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்தவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்குப் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விமான நிலைய வளாகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சந்தேகம்
விமான நிலையத்தின் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்த விரிவான தகவல்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
இந்நிலையில், ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சமீப காலமாக சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தம்மாம் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அவர்களே காரணமா என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மக்கள் அதிகம் கூடும் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.
