மேலும் இரு ஹிந்தி நடிகர்களுக்குக் குறிவைப்பு? டைகர் ஷெராப் வழக்கில் அதிர்ச்சி தகவல்
மும்பை: ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
அமீர் கான், ரன்பீர் கபூர் வீடுகளும் கண்காணிப்பு
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தத் தாக்குதலுக்காக ஆட்களை நியமித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஹரியானாவில் உள்ள அமீர் கானின் வீட்டையும், மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வீட்டையும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கண்காணித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
டைகர் ஷெராப் அவர்களின் முதன்மையான இலக்காக இருக்கவில்லை என்றும், அவரது வீட்டில் பாதுகாப்பு குறைவாக இருந்ததால் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
ஒரு மாதமாகத் திட்டமிட்டதாகத் தகவல்
ஹரியானாவைச் சேர்ந்த பூல் சிங் (18), ரெஹான் அன்சாரி (18) ஆகியோர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மும்பையின் தாதர் பகுதியில் உள்ள பல்வேறு விடுதிகளில் ஒரு மாதமாகத் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
டைகர் ஷெராப் மீது தாக்குதல் நடத்துவதற்கு முந்தைய நாள் அவர்களுக்குத் துப்பாக்கி கிடைத்ததாகவும், பின்னர் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை பார்த்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அந்த ஒத்திகையின்போது ஒரு துப்பாக்கி பழுதடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து விசாரணை
இந்த வழக்கில் ஆயுதங்களை விநியோகித்தவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு அடைக்கலம் அளித்தவர்கள் தொடர்பாக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமீர் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட நடிகர்களின் வீடுகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
