ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்வு: கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கும் நாட்கள் 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ‘விக்சித் பாரத்’ வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்கள் 100லிருந்து 125 ஆக உயர்த்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற த.வெ.க. கூட்டணி அரசு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கி, மொத்த வேலை நாட்களை 150 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் நிதிப் பங்களிப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வெளியிட்ட அரசாணையின்படி, மத்திய அரசின் ‘விபி ஜி ராம்ஜி’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டம் நடப்பு ஆண்டில் ஜூலை 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்துக்கான செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. இந்நிலையில், ஏற்கெனவே 125 நாட்கள் வேலைவாய்ப்பையும் முழுமையாகப் பயன்படுத்திய தகுதியான குடும்பங்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தகுதியுள்ள குடும்பங்கள் ஆண்டுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
ஆறு பிரிவினருக்கு முன்னுரிமை
கூடுதல் 25 நாட்கள் வேலைவாய்ப்பைப் பெற, 125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், தனியாக வசிக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் உள்ளிட்ட ஆறு பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடப்பு நிதியாண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கு கூடுதல் வேலை கிடைக்கும்?
125 நாட்கள் வேலைவாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பதுடன், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்த குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பிரிவுகளுக்குள் வராத பிற குடும்பங்களுக்கு கூடுதலான 25 நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்காது எனத் தெரிகிறது.
