உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை எதிர்மறையாகச் சித்தரிக்க முயற்சி: ஐநாவில் இந்தியா கண்டனம்
நியூயார்க்: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் சரிபார்க்கப்படாத புள்ளிவிவரங்கள் மூலம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை எதிர்மறையாகச் சித்தரிக்க முயல்வதை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் பர்கா தம்ரக்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவை நாடுகளுக்கு எதிராக அரசியல் அழுத்தம் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்வது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களை அணுகுவது உள்ளிட்ட வழிமுறைகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முறையான ஆவணங்களுடன் கூடிய குறிப்பிட்ட புகார்கள் முன்வைக்கப்பட்டால், அவற்றுக்கு விளக்கம் அளிக்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் பர்கா தம்ரக்கர் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் அவர் கூறினார்.
