“நீங்கள் ஜென் ஸி கிடையாது!” – கரப்பான் அமைப்பினரைக் கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிமன்றம்
புதுடில்லி: தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கரப்பான் அமைப்பைச் சேர்ந்த சவுரவ் தாஸ், அசுதோஷ் ரன்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தங்களுக்கு எதிரான நீதிமன்றக் காவல் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கரப்பான் அமைப்பினரிடம் நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அப்போது, “பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றக் காவல் தொடர்பான விசாரணை நடைபெறுவதற்கு முன்பாக, நீங்கள் தனியாக வழக்குத் தாக்கல் செய்தது ஏன்? அதுவரை உங்களால் காத்திருக்க முடியாதா?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், மனுதாரர்களின் வயது முறையே 27 மற்றும் 31 ஆக இருப்பதால், அவர்கள் ‘ஜென் ஸி’ பிரிவில் வரமாட்டார்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். ஏற்கெனவே கையெழுத்திட்ட பிணைப் பத்திரத்தின் நிபந்தனைகளை அவர்கள் மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“மக்களாட்சியில் ஆட்சி மாற்றம் என்பது தேர்தல் மூலமே கொண்டுவரப்பட வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
கரப்பான் அமைப்பினரின் ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விருப்பமில்லை என்று நீதிபதி சுப்ரமணியன் பிரசாத் தெரிவித்ததைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தங்களது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
