“வர்த்தகம் பாதிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றம் தலையிடும்” – தலைமை நீதிபதி சூர்ய காந்த் உறுதி
புதுடெல்லி: போராட்டங்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றம் தலையிடும் என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்துள்ளார். அதேவேளையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவில் உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
டெல்லியில் போராட்டங்களால் பண்டிகைக் கால வர்த்தகம் பாதிக்கப்படுவதாகக் கூறி, வணிகர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய் மால்யா பக்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வணிகர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தெகத்ராய் ஆஜரானார்.
ரூ.250 கோடி வர்த்தகம் பாதிப்பு என வாதம்
விசாரணையின்போது, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து, புதுடெல்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக வணிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, கன்னாட் பிளேஸ் பகுதியில் கடைகளைத் திறப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், அங்குள்ள சென்ட்ரல் பூங்கா மூடப்பட்டதாகவும் வழக்கறிஞர் கூறினார். இதனால் இதுவரை சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டார்.
எனவே, போராட்டத்துக்குத் தடை விதிப்பதுடன், உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் வணிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
போராட்ட உரிமை மற்றும் வாழ்வாதாரம் குறித்து நீதிமன்றம் கருத்து
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் வணிகர்கள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படுவது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் கூறினர்.
அதேவேளையில், போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கிய உரிமை என ஒரு தரப்பினர் வாதிடுவதாகவும், போராட்டங்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மற்றொரு தரப்பினர் தெரிவிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டால், உச்ச நீதிமன்றம் தலையிடும் என்றும் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.
வழக்கு 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்த வழக்கில் தற்போது இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
