அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குறித்து கவலை: வெளியுறவு அமைச்சகம்
புதுடில்லி: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில், அரோரா பகுதியில் உள்ள ஹிந்துக் கோவிலை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தத் திட்டமிட்டதாக வெளியான தகவல்கள் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ஹிந்துக் கோவிலை குறிவைத்து தாக்குதல் நடத்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டார். இந்திய வம்சாவளியினருக்கு எதிரான வன்முறை, ஹிந்து விரோதப் போக்கு மற்றும் இனவெறி நடவடிக்கைகள் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேக நபரைக் கைது செய்து காவலில் வைத்ததுடன், அவர் மீது குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ள அமெரிக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அமெரிக்காவில் இனவெறி மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருவது குறித்த கவலைகளை இந்தச் சம்பவம் மேலும் வலுப்படுத்துவதாக ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் வாழும் இந்தியச் சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிக விழிப்புணர்வும், சகிப்புத்தன்மையற்ற போக்குகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளும் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
