டெல்லியில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக இண்டி கூட்டணி தலைவர்கள் மீது எஃப்ஐஆர்
புதுடெல்லி: டெல்லியில் உரிய அனுமதியின்றி பேரணி நடத்தியதாகவும், போலீஸ் தடுப்புகளைச் சேதப்படுத்தியதாகவும் கூறி இண்டி கூட்டணி தலைவர்கள் மீது டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இண்டி கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தப் பேரணிக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி, போராட்டக்காரர்களைத் தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இருப்பினும், அந்தத் தடுப்புகளை அகற்றிவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரணி நிறைவடைந்த நிலையில், அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியது மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தி சாலைத் தடுப்புகளைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாரகாம்பா சாலை மற்றும் திலக் மார்க் காவல் நிலையங்களில் இந்த எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பேரணியின் முடிவில் இண்டி கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் 14 குறைபாடுகள் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
