அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நவராத்திரி கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது.
இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் கர்பா நடனமாடி நவராத்திரியைக் கொண்டாடுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் நவராத்திரி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்த இளம்பெண்களும் ஆண்களும் இணைந்து கர்பா நடனமாடினர்.
அவர்களின் நடனத்தைக் கண்ட பொதுமக்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். இந்தக் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
