அமெரிக்காவின் நடவடிக்கையை ஏற்க முடியாது: இந்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு
புதுடில்லி: நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்டத்தில் இந்திய நிறுவனங்களை அமெரிக்கா இடைநீக்கம் செய்துள்ளதற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என்று வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், PERM திட்டம் என்பது H-1B விசா நடைமுறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்கனவே வழங்கப்பட்ட H-1B விசாக்களையோ, அவற்றை வைத்திருப்பவர்களையோ நேரடியாகப் பாதிக்காது என்றும் விளக்கினார். இருப்பினும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களின் கிரீன் கார்டு பெறும் நடைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
இந்திய மற்றும் அமெரிக்க திறமையான பணியாளர்கள் இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இந்திய வல்லுநர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் புதுமை, ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட துறைகளில் பயனடைகின்றன. அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை, இரு நாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்தும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், அமெரிக்க துணை அதிபர் தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை என்றும், அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இந்திய வல்லுநர்கள் ஆற்றிவரும் பங்களிப்பை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் விமர்சித்தார். பல தலைமுறை புலம்பெயர்ந்தோரின் உழைப்பும் பங்களிப்பும் அமெரிக்காவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
