மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை மாதவரத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு பால் கொள்முதல், உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், ரூ.2.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாநில ஆய்வக துணைக் கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தில் பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை துல்லியமாக ஆய்வு செய்யும் வசதிகள் உள்ளன.
புதிய பால் பண்ணை கட்டுமானப் பணிகளும் ஆய்வு
மாதவரம் ஆவின் வளாகத்தில் நடைபெற்று வரும் புதிய பால் பண்ணை கட்டுமானப் பணிகளையும் முதல்வர் விஜய் நேரில் பார்வையிட்டார். சென்னை மாநகர மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.152 கோடிக்கும் அதிகமான மதிப்பில் இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் மக்களிடம் நேரில் மனுக்கள் பெற்ற விஜய்
ஆவின் பால் பண்ணை ஆய்வைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தனது சட்டமன்றத் தொகுதியான பெரம்பூருக்குச் சென்றார். அங்குள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் காத்திருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இ-சேவை மூலம் சான்றிதழ்கள் வழங்கல்
மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், இ-சேவை மையம் வாயிலாக ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த பொதுமக்களுக்கு பல்வேறு அரசு சான்றிதழ்களையும் முதல்வர் விஜய் வழங்கினார்.
வடசென்னையில் மழைநீர் தேக்கம் குறித்து ஆலோசனை
வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்சினை மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
