“மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும்”: ஜமாத் அறிவிப்பால் சர்ச்சை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில், வெளியூர் வியாபாரிகள் உள்ளிட்டோர் மாலை 6 மணிக்கு மேல் ஊருக்குள் வரக்கூடாது என ஐக்கிய முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகையில் கூறப்பட்ட தகவல்
‘வியாபாரிகள் கவனத்திற்கு’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், வெளியூர் வியாபாரிகள், கொரியர் சேவை மற்றும் தண்ணீர் வண்டி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஊருக்குள் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாலை 6 மணிக்குள் ஊரிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமாத்திற்கு அதிகாரம் உள்ளதா? கேள்வி
ஒரு கிராமத்திற்குள் வெளியூர் வியாபாரிகள் வருவதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜமாத் நிர்வாகத்திற்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகையை அகற்ற தாசில்தார் அறிவுறுத்தல்
இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதன் கூறுகையில், ஜமாத் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு பலகையை அகற்றத் தவறும் பட்சத்தில், அதை அதிகாரிகள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“கட்டளை அல்ல; வேண்டுகோள்” – ஜமாத் தலைவர் விளக்கம்
இதுகுறித்து ஜமாத் தலைவர் அப்துல் குத்தூஸ் கூறுகையில், வெளியூர் வியாபாரிகள் ஊருக்குள் வரக்கூடாது என கட்டளையிடவில்லை என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டுகோள் மட்டுமே விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் நடைபெறும் திருட்டு சம்பவங்களைத் தவிர்க்கவும், குழந்தைகள் தெருக்களில் விளையாடும்போது ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கவும், பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
