12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: சபை ஆசிரியர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலப்பள்ளம் பகுதியில், வேத வகுப்புக்கு சென்ற 12 வயது பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் தேவாலய சபை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ரோஸ்லின் வேதக்கண்ணன், அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு வேத வகுப்புகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வேத வகுப்புக்கு செல்வதை நிறுத்திய சிறுவன்
அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவர் வழக்கமாக வேத வகுப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அந்த மாணவர் வேத வகுப்புக்கு செல்வதை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை விசாரித்தபோது, வகுப்புக்கு செல்ல விருப்பமில்லை என மாணவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோரிடம் சிறுவன் தெரிவித்த தகவல்
தொடர்ந்து விசாரித்தபோது, வேத வகுப்பு நடத்தும் சபை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் மாணவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவரின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போக்சோ சட்டத்தின் கீழ் கைது
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து, சிறாருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டின் கீழ் சபை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
