கோவையில் கடற்படை வீரர் கைது
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணிடம் முக்கியமான கடற்படை தகவல்களை பகிர்ந்ததாகக் கூறப்படும் இந்திய கடற்படை வீரர் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 31 வயதான பிரதீப் முகர்ஜி என்பவரை ஆந்திரப் பிரதேச காவல்துறையின் கவுன்டர் இன்டலிஜென்ஸ் பிரிவு கைது செய்துள்ளது.
சமூக வலைதளம் மூலம் ஹனி டிராப்?
பிரதீப் முகர்ஜி கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் சேர்ந்ததாகவும், விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்ட கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் பணியாற்றி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பெண் ஒருவர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும், அந்த பெண் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடையவர் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய கடற்படை தகவல்கள் பகிரப்பட்டதாக குற்றச்சாட்டு
அந்த பெண்ணிடம் பிரதீப் முகர்ஜி, விசாகப்பட்டினம் கடற்படை தளத்துடன் தொடர்புடைய முக்கியமான கடற்படை சொத்துகள், கப்பல்களின் இயக்கம் மற்றும் செயல்பாட்டு விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த தகவல்கள் எந்த அளவுக்கு பகிரப்பட்டன என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
டிஜிட்டல் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார்
பிரதீப் முகர்ஜியின் சமூக வலைதள மற்றும் டிஜிட்டல் நடவடிக்கைகளில் சந்தேகத்திற்கிடமான தகவல் பரிமாற்றங்கள் இருப்பதை ஆந்திரப் பிரதேச கவுன்டர் இன்டலிஜென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
INS Agrani-யில் கைது
கோவை ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள INS Agrani கடற்படை பயிற்சி மையத்தில் பிரதீப் முகர்ஜி மேலாண்மை மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்றிருந்தார்.
அப்போது அக்டோபர் 3ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கவுன்டர் இன்டலிஜென்ஸ் குழுவினர் அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விஜயவாடாவில் உள்ள கவுன்டர் இன்டலிஜென்ஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணம் பெற்றாரா? தொடர்ந்து விசாரணை
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண்ணிடம் தகவல்களை பகிர்ந்ததற்காக பிரதீப் முகர்ஜிக்கு பணம் வழங்கப்பட்டதா, எத்தகைய தகவல்கள் பகிரப்பட்டன, இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
