மாணவர்களுக்கு வழங்கும் முன் காலை உணவை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்க்க வேண்டும்
சென்னை: மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முன், அதன் தரத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உணவை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சமையலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையலறையை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தல்
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், காலை உணவு சமைக்கும் சமையலறையில் சமையலுக்குத் தேவையான பொருட்களைத் தவிர பிற பொருட்களை வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமையலறையை எப்போதும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திரங்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்
சமையல் பாத்திரங்கள் மற்றும் உணவு பரிமாறும் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்னரும், பின்னரும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமைத்த உணவை மாணவர்களுக்கு பரிமாறுவதற்கு முன், அதன் தரத்தை ஆசிரியர்கள் சாப்பிட்டு பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
உணவு சமைக்கும்போதும், சமைத்த பின்னரும், பரிமாறுவதற்காக வேறு பாத்திரங்களுக்கு மாற்றிய பின்னரும், உணவை மூடி வைத்து பாதுகாப்பாக பராமரிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு உணவு பரிமாறும் பணியை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
