திருப்பரங்குன்றம் மலைக்கு சமையல் பொருட்கள் கொண்டு செல்ல தடை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் சென்ற தர்கா நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
மலை மீது உணவு சமைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, சமையல் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
7 நாட்களுக்கு ஒருமுறை முறைதாரர்கள் மாற்றம்
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் அவுலியா தர்காவுக்கு முறைதாரர்கள் சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. அவர்கள் 7 நாட்களுக்கு ஒருமுறை மாறி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை முறைதாரர் அப்பாஸ் தனது குடும்பத்தினருடன் தர்காவுக்கு சென்றார். அவர்கள் சமைத்து சாப்பிடுவதற்காக அரிசி, தக்காளி, பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சமையல் பொருட்களையும் எடுத்துச் சென்றனர்.
சமையல் பொருட்களுடன் செல்ல போலீசார் தடை
மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், சமையல் பொருட்களை மலையின் மேற்பகுதிக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து தர்கா நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமை தொடர்ந்து பறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், இதனால் மலை மீது உள்ள தர்காவின் சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மின்அடுப்பு கொண்டு சென்றபோதும் தடுத்து நிறுத்தம்
சிறிது நேரத்துக்குப் பிறகு தர்கா நிர்வாகிகள் மீண்டும் மின்அடுப்பு மற்றும் சமையல் பொருட்களுடன் மலைக்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் தர்கா நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவை போலீசார் சுட்டிக்காட்டினர்
மலை மீது உணவு சமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, மலை மீது உணவு சமைப்பதற்கான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும், பேரிச்சம்பழம், பிஸ்கட் உள்ளிட்ட சமைக்கத் தேவையில்லாத உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லலாம் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
பழங்கள், பேரிச்சம்பழம் எடுத்துச் செல்ல அனுமதி
இதையடுத்து சிறிது நேரத்துக்குப் பிறகு, தர்கா நிர்வாகிகள் பழங்கள், பேரிச்சம்பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர்.
இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
