5 யானைகள் இடமாற்றத்துக்கு தடை விதிக்க மறுப்பு
கவுகாத்தி: அசாமில் தனியார் வசம் உள்ள 5 வளர்ப்பு யானைகளை தமிழக கோயில்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்போதைய நிலையில் தடை விதிக்க கவுகாத்தி ஐகோர்ட் மறுத்துள்ளது.
தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் பெறப்படவில்லை என்பது நிரூபிக்கப்படாத நிலையில், யானைகளின் இடமாற்றத்திற்கு தடை விதிக்க முதற்கட்ட முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரிட் மனு தாக்கல்
அசாமில் இருந்து 5 வளர்ப்பு யானைகளை ஆன்மிக நோக்கங்களுக்காக தமிழக கோயில்களுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனவிலங்கு ஆர்வலர் ரோஹித் சவுத்ரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி அசுதோஷ் குமார் மற்றும் நீதிபதி அருண் தேவ் சவுத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழகத்தில் யானைகள் தவறாக நடத்தப்படலாம் என வாதம்
விசாரணையின்போது, ஏற்கனவே தமிழகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ‘ஜாய்மாலா’ என்ற யானை அனுமதிக்கப்பட்ட காலத்தைத் தாண்டியும் அங்கேயே இருந்ததாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது தமிழக கோயில்களுக்கு கொண்டு செல்லப்படும் யானைகளும் தவறாக நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மனுதாரர் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
“தடை விதிக்க தற்போது காரணமில்லை”
இதனை பரிசீலித்த நீதிபதிகள், தேவையான சட்டப்பூர்வ அனுமதிகள் பெறப்படவில்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்படாத நிலையில், யானைகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்க தற்போது காரணமில்லை என தெரிவித்தனர்.
அசாம் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.என். கோஸ்வாமி, 5 யானைகளையும் தமிழக கோயில்களுக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், ஆன்மிக நோக்கங்களுக்காக கொண்டு செல்லப்படும் யானைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
யானைகளின் நலனை உறுதி செய்ய வேண்டும்
அதேநேரத்தில், தனியார் வசம் உள்ள யானைகளின் உடல்நலம் பாதுகாக்கப்படுவதையும், அவை அனுமதிக்கப்படாத அல்லது தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இது தொடர்பாக அசாம் அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவை நிலுவையில் வைத்துள்ளனர்.
அக்டோபர் 15ல் மீண்டும் விசாரணை
இந்த வழக்கு மற்றும் யானைகள் இடமாற்றத்துக்கு எதிரான இடைக்கால மனு ஆகிய இரண்டையும் அக்டோபர் 15ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கவுகாத்தி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 5 வயதான ‘துர்கா’ என்ற பெண் யானை, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது.
