யுஏஇ அதிபர் தொலைபேசியில் வாழ்த்து
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான், அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, யுஏஇ அதிபருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி தனது 76வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி நன்றி
யுஏஇ அதிபரின் தொலைபேசி அழைப்பு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், அவரை “எனது சகோதரர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா – யுஏஇ இடையேயான விரிவான உத்திசார் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு
இந்தியா – யுஏஇ இடையேயான விரிவான உத்திசார் கூட்டணியின் கீழ் எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், முதலீடு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேற்கு ஆசிய நிலவரம் குறித்து ஆலோசனை
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்படுவதற்கான உறுதியை இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
