செய்தி
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட 1,498 நினைவுப் பரிசுகளின் 8-வது கட்ட இ-ஏலம் இன்று (செப்.17) தொடங்குகிறது. இந்த ஆன்லைன் ஏலம் அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இவ்வாறு வழங்கப்படும் கலை மற்றும் கலாசாரப் பொருட்களை பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் ஏலம் எடுக்கும் வகையில் மத்திய அரசு இ-ஏலத்தை நடத்தி வருகிறது.
‘நமாமி கங்கை’ திட்டத்திற்கு ரூ.52 கோடி
டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை நடைபெற்ற 7 கட்ட இ-ஏலங்கள் மூலம் ரூ.52 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தத் தொகை முழுவதும் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் ‘நமாமி கங்கை’ திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பொதுமக்கள் மற்றும் சேகரிப்பாளர்களிடம் இந்த ஏலத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
‘டாப் 50’ பொருட்கள்
8-வது கட்ட ஏலத்தில் இடம்பெற்றுள்ள 1,498 பொருட்களில், கலாசார மற்றும் கலை முக்கியத்துவம் வாய்ந்த 50 பொருட்கள் முக்கியப் பொருட்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் சிலவற்றின் ஆரம்ப ஏல விலை:
- கர்நாடக வெள்ளி ராமர் சிலை – ரூ.13.5 லட்சம்
- வெள்ளியிலான காகதீய தோரணம் – ரூ.9 லட்சம்
- கோண்ட் கலை ‘ட்ரீ ஆப் லைப்’ ஓவியம் – ரூ.75 லட்சம்
- தேரில் அமர்ந்த ஜெகந்நாதர் பரிவாரம் – ரூ.6 லட்சம்
- தங்க முலாம் பூசப்பட்ட ராதா-கிருஷ்ணர் ஓவியம் – ரூ.5.40 லட்சம்
இதில், கோண்ட் கலைப் பிரிவைச் சேர்ந்த ‘ட்ரீ ஆப் லைப்’ ஓவியத்தின் ஆரம்ப விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களின் கலைப் பொருட்கள்
அசாம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆன்மிகச் சின்னங்கள் மற்றும் விளையாட்டு சாதனைகள் இந்த ஏலத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியம் மற்றும் கலை வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஏலத்தில் பங்கேற்பது எப்படி?
பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் pmmementos.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இ-ஏலத்தில் பங்கேற்கலாம்.
மேலும், டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்தப் பொருட்களை நேரடியாகப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
