செய்தி
கோவை: தீவிரவாத ஆதரவு ஆன்லைன் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் கோவையைச் சேர்ந்த இளைஞரை, தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவதாக உத்தரப் பிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
ஆசம்கர் இளைஞர் கைது
இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை போலீசார் கடந்த 12-ம் தேதி கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையைச் சேர்ந்த மக்சூத் அலி என்பவர் ஆன்லைன் தொடர்புகளுக்காக பிரத்யேக செயலிகளை உருவாக்கியிருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் விசாரணை
இதையடுத்து உத்தரப் பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கோவை வந்து, கோவை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மக்சூத் அலியை நேற்று (செப்.16) இரவு பிடித்து உத்தரப் பிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
உபா சட்டத்தின் கீழ் வழக்கு
இதுதொடர்பாக கோவை போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டதாகக் கூறி, உத்தரப் பிரதேச போலீசார் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், கோவையில் கைது செய்யப்பட்ட மக்சூத் அலி, ஒரு பிரத்யேக செயலியை உருவாக்கி அதன் மூலம் முகமது நபீல் உள்ளிட்ட சிலருடன் தொடர்பில் இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் எண்கள் தொடர்பாக விசாரணை
மக்சூத் அலியின் இரண்டு வாட்ஸ்அப் எண்களிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த எண்கள் இடம்பெற்றிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகவும் விசாரணை நடத்துவதற்காக மக்சூத் அலியை உத்தரப் பிரதேச போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாக கோவை போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
