மதுரை: திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில், அறநிலையத்துறைக்கு என்ன பணி உள்ளது என மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எஸ். ஸ்ரீமதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மலை அளவீடு செய்ய ஏற்கனவே உத்தரவு
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய மதுரை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
மேலும், அளவீட்டுப் பணி நிறைவடைந்ததும் அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அறநிலையத்துறை மேல்முறையீடு
இந்த உத்தரவுக்கு எதிராக அறநிலையத்துறை கமிஷனர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மனு தாக்கல் செய்து, அதில் முன்வைத்த வாதங்களை தெரிவிக்கலாம் என உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.
“முழு மலையையும் அளவிட முடியாது”
முழு மலையையும் அளவீடு செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும், மனுதாரர் கோரிய நிவாரணத்துக்கு அப்பாற்பட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், அறநிலையத்துறை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
“அறநிலையத்துறைக்கு என்ன வேலை?”
இதற்கு நீதிபதிகள், கோவிலின் நலனை கருத்தில் கொண்டு அதன் சொத்துகளை பாதுகாக்கும் வகையிலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் கோவில், தர்கா மற்றும் தொல்லியல் துறை ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும், இதில் அறநிலையத்துறைக்கு என்ன பணி உள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.
செப்.25-க்கு ஒத்திவைப்பு
அறநிலையத்துறை சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு நீதிபதிகள் அவகாசம் வழங்கினர்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
