தவெக கூட்டணி கட்சிகளுடன் விஜய் ஆலோசனை
சென்னையில் தவெக கூட்டணி கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 9) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசியல் சூழலில் இடைத்தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள்
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. மேலும், தவெக தலைமையிலான கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்
விஜய் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அமைச்சர் ஷாஜகான், சையத் பாரூக் பாஷா உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதிய கூட்டணி குறித்து ஆலோசனை
இடைத்தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உருவாக்கப்பட உள்ள புதிய கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது என்பது குறித்தும் முதல்வர் விஜய் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
