சென்னை: கொளத்தூர் சட்டசபைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார். அவருடைய வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரியும், தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரியும் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) ஏற்பட்டதாகக் கூறப்படும் கோளாறுகள், பொருத்தமின்மை மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி, கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 286 EVMகளையும் சரிபார்க்க வேண்டும் என்றும், 100 சதவீத VVPAT சீட்டுகளை எண்ண வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரியிருந்தார்.
ஆகஸ்ட் 31-ல் நடந்த விசாரணை
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு EVMகளை சரிபார்க்க மே 7-ம் தேதி விண்ணப்பித்ததாகவும், ஆனால் தேர்தல் ஆணையம் 45 நாட்கள் காலக்கெடு கடந்த பிறகு, ஜூலை 29-ம் தேதி சரிபார்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட சில EVMகளில் செயல்பாட்டுக் கோளாறுகள் ஏற்பட்டதாகவும் ஸ்டாலின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் EVMகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பிரச்னைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என கோரப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு
இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஒரு வேட்பாளரின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரும் கோரிக்கையை தேர்தல் மனு மூலமாக மட்டுமே முன்வைக்க முடியும் என்றும், ரிட் மனுவாக இதனை விசாரிக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 329(பி) பிரிவு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், தேர்தல் தொடர்பான சவால்களுக்கு குறிப்பிட்ட சட்ட நடைமுறை இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
ஸ்டாலின் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செப். 3) தீர்ப்பு வழங்கியது.
ஸ்டாலின் தாக்கல் செய்த ரிட் மனு “விசாரணைக்கு உகந்ததல்ல” (not maintainable) எனக் கூறி நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர்.
நீதிமன்றத்தின் விளக்கத்தின்படி, ஸ்டாலின் வெறும் EVM அல்லது VVPAT சரிபார்ப்பை மட்டும் கோரவில்லை; கொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபுவின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதனால், இது தேர்தல் முடிவையே நேரடியாக சவால் செய்யும் கோரிக்கையாக இருப்பதால், அதற்கான உரிய சட்ட வழிமுறை தேர்தல் மனு மூலமாகத்தான் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
தேர்தல் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு
ஸ்டாலின் தரப்பில் முன்வைக்கப்பட்ட EVM சரிபார்ப்பு தொடர்பான பிரச்னைகள் குறித்து உரிய தேர்தல் மனு நடவடிக்கையில் பரிசீலிக்க முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, தற்போதைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே தவிர, தேர்தல் தொடர்பான சட்டரீதியான பிற வழிமுறைகளை அணுகுவதற்கான வாய்ப்பு திறந்தே விடப்பட்டுள்ளது.
