புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விமர்சித்து அவநம்பிக்கையையும் பொய்களையும் பரப்புவதாக எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில், இந்தியா 7.8 சதவீத வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளதாகவும், இந்த சாதனை நாட்டு மக்களின் உறுதியான முயற்சி மற்றும் கடின உழைப்பால் சாத்தியமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் நிலையான சூழல் இல்லாத நிலையிலும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் பல்வேறு மோதல்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன், விநியோகச் சங்கிலிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதுடன், உள்நாட்டு உற்பத்தித் திறனையும் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய சீர்குலைவுகளை எதிர்கொள்ள தற்சார்பு இந்தியாவை உருவாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை குறைப்பதுடன், அத்தியாவசிய தேவைக்கு அதிகமாக தங்கம் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்தால், இந்தியாவின் வளர்ச்சி மேலும் வேகமடையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
