சென்னை: தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுபோன்ற தடையை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதித்து டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து ஈரோட்டைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது பாரம்பரியமாக நடத்தப்படும் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிருகவதை தடுப்புச் சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உள்ளிட்ட நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பான பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதால், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், தமிழகத்தில் சேவல் சண்டை நடத்தக்கூடாது என சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார்.
மேலும், போலீசாருக்கு பல்வேறு முக்கிய பணிகள் உள்ள நிலையில், ஆடு சண்டை, சேவல் சண்டை எங்கு நடைபெறுகிறது என்பதை கண்காணிப்பதுதான் அவர்களின் பணியா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கை தொடர்பாக போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
