ஒட்டாவா: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கனடா வருகைக்கு டொராண்டோவில் ஹிந்து புலம்பெயர் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மோகன் பாகவத் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற ‘இந்து விஸ்வ பந்து – உலகளாவிய நட்பு’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உரையாற்றினார். கனடாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மோகன் பாகவத்தின் கனடா வருகைக்கு சில எம்.பி.க்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டில் செயல்படும் பல ஹிந்து அமைப்புகள் அவரது வருகைக்கு ஆதரவு தெரிவித்தன.
டொராண்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனடாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹிந்து புலம்பெயர் சமூகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு அமைதி, கலாசாரம் மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் முக்கிய தருணமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.
விமானப்படையின் முன்னாள் அதிகாரி கார்த்திக் திரிவேதி, மோகன் பாகவத்தின் உரையை நேரில் கேட்பது தனக்கு சிறந்த வாய்ப்பு என தெரிவித்தார். மேலும், கனடாவின் எட்டு மாகாணங்களில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்வந்ததாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சாவ்தா கூறினார்.
டொராண்டோ ஹிந்து சபா கோவிலைச் சேர்ந்த ரஜிந்தர் பிரசாத், மோகன் பாகவத்தின் வருகை ‘உலகம் ஒரே குடும்பம்’ என்ற செய்தியை எடுத்துரைப்பதாக குறிப்பிட்டார். தங்களது கலாசாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சுக்லா தெரிவித்தார்.
மோகன் பாகவத்தை வரவேற்க ஹிந்து சமூகம் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரது கருத்துகளை அனைத்து கனடர்களும் கேட்டு சிந்திக்க வேண்டும் என்றும் ஹிந்து புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த பாட்டியா தெரிவித்துள்ளார்.
