லெய்செஸ்டர்: இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற இந்து–முஸ்லிம் மோதல்கள் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய மஜித் நவ்சார்கா எனப்படும் மஜித் ஃப்ரீமனிடம் இருந்து 2.5 லட்சம் பவுண்டுக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் கிரிப்டோ சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2024 மார்ச் 19-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட 2,39,008 பவுண்ட் ரொக்கத்தை, லெய்செஸ்டர்ஷயர் போலீசார் ‘terrorist cash’ என வகைப்படுத்தி, அதனை நிரந்தரமாக பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்திய மதிப்பில் இந்தத் தொகை சுமார் ரூ.2.9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், KuCoin, Nest, Revolut மற்றும் CB Payments உள்ளிட்ட தளங்களுடன் தொடர்புடைய கிரிப்டோ சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு சுமார் 36,069 அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஜித் ஃப்ரீமனுக்கு எதிராக மொத்தம் ஆறு பறிமுதல் மனுக்களை போலீசார் தாக்கல் செய்துள்ளதாகவும், அவை 2026 நவம்பர் 10-ம் தேதி பர்மிங்ஹாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, 2022-ம் ஆண்டு லெய்செஸ்டர் வன்முறை சம்பவங்களின்போது சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்ந்து பதற்றத்தை அதிகரித்ததாக மஜித் ஃப்ரீமன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குர்ஆன் அவமதிப்பு, முஸ்லிம் சிறுமி கடத்தல் முயற்சி மற்றும் மசூதி தாக்குதல் உள்ளிட்ட தகவல்களை அவர் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கடத்தல் தொடர்பான தகவல் தவறானது என லெய்செஸ்டர் போலீசார் பின்னர் தெரிவித்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
2022 செப்டம்பர் லெய்செஸ்டர் வன்முறை சம்பவம் தொடர்பாக சட்டவிரோத வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில் 2024-ம் ஆண்டு மஜித் ஃப்ரீமன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அவருக்கு 22 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மஜித் ஃப்ரீமன் மீது பயங்கரவாதம் தொடர்பான இரண்டு தனிப்பட்ட குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், 2015 சார்லி ஹெப்டோ தாக்குதலை குறிப்பிட்டு பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள அல்லது தூண்டுவதற்கான பதிவுகளை வெளியிட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
அதேவேளை, தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் கிரிப்டோ சொத்துகள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என நீதிமன்றம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பணம் பயங்கரவாத நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை என்றும், சமூகப் பணிகளுடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் மஜித் ஃப்ரீமன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால், லெய்செஸ்டர் கலவர வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்ற மஜித் ஃப்ரீமனைச் சுற்றியுள்ள விவகாரம், தற்போது பணம் மற்றும் கிரிப்டோ சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் மற்றும் நிலுவையில் உள்ள பயங்கரவாத குற்றச்சாட்டுகள் காரணமாக மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
