சென்னை: வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு சில நேரங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில் ஓசூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக நடந்த விவாதத்தில், அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி, விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஓசூரில் ஏற்கனவே பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கியுள்ளதாகவும், அங்கு உள்ள தனியார் விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு திட்டம் கைவிடப்பட்டதைப் போல, ஓசூர் விமான நிலையத் திட்டத்தையும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கைவிட வேண்டும் என பாலகிருஷ்ணரெட்டி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும், திட்டங்களை செயல்படுத்தும் போது விவசாய நிலங்களை கையகப்படுத்துவது சில சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்தார்.
ராசிமணல் அணை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
இதே விவாதத்தில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை தமிழகம் எதிர்த்து வருவது மட்டும் போதாது என்றும், அதற்கு மாற்றாக ராசிமணல் அணை மற்றும் நீர்மின் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணரெட்டி கோரிக்கை விடுத்தார்.
தமிழக எல்லைப் பகுதியான ஒகேனக்கல் அருகே காவிரியின் குறுக்கே ராசிமணல் அணை மற்றும் நீர்மின் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சிகள் காமராஜர் காலத்திலும், எம்ஜிஆர் ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு கவனம் செலுத்தினால் தமிழகத்திற்கு கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
