பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றதாக கூறி, அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் யாதகிரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், அப்பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் குருராஜ் ஜோஷி மற்றும் அண்ணா சாஹேப் தேஷ்முக் ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, யாதகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இரு ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கர்நாடக குடிமைப் பணிகள் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, இருவரையும் பணி இடைநீக்கம் செய்வதாக மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்துள்ளார். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் அமைப்பு சார்ந்த செயல்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் குறித்து விவாதம் எழுந்துள்ள நிலையில், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
