சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அவர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் சொத்து தகராறு தொடர்பாக மரியவில்சன், அவரது தந்தை நெஸ்தோர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மரியகுலோத் மற்றும் அவரது மனைவி கெரோலின் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2022-ம் ஆண்டு லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் மரியவில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூறுவதற்கு நிதியமைச்சர் இங்கிலாந்து அரசர் அல்ல” எனக் குறிப்பிட்டார். மேலும், அமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரானவர், பதவிக்கு வந்த பிறகு ஆஜராக முடியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி காவல்துறை தரப்பில், அமைச்சர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகலாம் எனக் கூறினார்.
மேலும், அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பவில்லை என்றும், எந்த தேதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் கோரப்பட்டது.
புதிய குற்றப்பத்திரிகையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், வரும் 31-ம் தேதிக்கு பிறகு புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் ஆஜராவார் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரி நிதியமைச்சர் மரியவில்சன் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கினார்.
