சென்னை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு என விமர்சித்ததாக கூறப்படும் சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையா தனது கருத்தை திரும்பப்பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகால பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் மரபின் தொடர்ச்சியாகவும் ஜல்லிக்கட்டு விளங்கி வருகிறது. இத்தகைய பாரம்பரிய விளையாட்டை இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டு என சட்டப்பேரவையிலேயே கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.
அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற எம்எல்ஏ கருப்பையாவின் கோரிக்கை நியாயமானது என்றும், அந்த ஆலையை மீண்டும் இயக்குவதற்கான கோரிக்கையை நாம் தமிழர் கட்சியும் ஆதரிப்பதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆனால், சர்க்கரை ஆலைக்கு நிதி கோருவதற்காக ஜல்லிக்கட்டை இழிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மது அருந்தும் இளைஞர்கள் சீரழியவில்லையா? காளையை வளர்க்கும் இளைஞர்கள்தான் சீரழிகிறார்களா?” என கேள்வி எழுப்பிய சீமான், இளைஞர்களை மண்ணோடும், மாடுகளோடும், வேளாண்மையோடும் இணைக்கும் ஜல்லிக்கட்டை மட்டும் சீரழிவு என கூறுவது எந்த வகையில் நியாயம் என்றும் விமர்சித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல என்றும், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நாட்டு மாட்டு இனங்களின் பாதுகாப்பு மற்றும் கிராமிய பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்த வாழ்வியல் பண்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காளையை ஜல்லிக்கட்டுக்குத் தயார்படுத்துவதற்காக உழவர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக அதனை குடும்ப உறுப்பினரைப் போல வளர்த்து வருவதாகவும், அதன் உணவு, உடல்நலம் மற்றும் பராமரிப்பில் மிகுந்த அக்கறை செலுத்துவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை நினைவுபடுத்திய அவர், “எங்கள் மாடு, எங்கள் மண், எங்கள் உரிமை, எங்கள் ஜல்லிக்கட்டு” என்ற உணர்வுடன் இளைஞர்கள் போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் அடையாளத்தையும் பண்பாட்டையும் இழிவுபடுத்திவிட்டு தமிழ்நாட்டை வளர்க்க முடியாது என தெரிவித்த சீமான், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மண்ணின் அடையாளம் என்றும் கூறியுள்ளார்.
எனவே, ஜல்லிக்கட்டை “இளைஞர்களையும் சமூகத்தையும் சீரழிக்கும் விளையாட்டு” என சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, தனது கருத்தை உடனடியாக திரும்பப்பெற்று தமிழ்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
