வீட்டுப்பாடம் செய்யாததால் அடிக்கப்பட்டதாக புகார்: 6 வயது சிறுவன் உயிரிழப்பு
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததாக கூறப்படும் சம்பவத்தில், 6 வயது சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘லிட்டில் கார்டன்’ தனியார் பள்ளியில் படித்து வந்த பிரணய் தேஜா, நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியை அவரை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பயத்தில் அழுத சிறுவன், ஆசிரியையின் மடியிலேயே மயங்கி விழுந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லை
சிறுவனை உடனடியாக கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயத்தால் ஏற்பட்ட மாரடைப்பு அல்லது அதிர்ச்சி காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே மரணத்திற்கான உறுதியான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மீது நடவடிக்கை கோரி போராட்டம்
சம்பவம் குறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித்துறை சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன், விசாரணைக்காக 3 பேர் கொண்ட சிறப்புக் குழுவையும் அமைத்துள்ளது.
