ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க பயணத்துக்கு அனுமதி மறுப்பு
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், யூனிவர்சிட்டி ஆஃப் லண்டன் மற்றும் லண்டன் பிஸினஸ் ஸ்கூல் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்குச் சென்று, அங்குள்ள கல்வி முறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று லண்டனில் இருந்து அமெரிக்கா சென்று, அங்குள்ள சில பல்கலைக்கழகங்களைப் பார்வையிட ரேவந்த் ரெட்டி திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்க பயணத்துக்கு அனுமதி இல்லை
ரேவந்த் ரெட்டியின் லண்டன் மற்றும் அமெரிக்க பயணம் குறித்து அவர் புறப்படுவதற்கு முன்பாகவே தெலங்கானா அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா செல்வதற்கான அனுமதி தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தனது திட்டத்தில் மாற்றம் செய்துள்ள ரேவந்த் ரெட்டி, லண்டன் பயணத்தை நாளை முடித்துக்கொண்டு ஹைதராபாத் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
