ராஜஸ்தானில் கட்சியினரை விரட்டிய கிராம மக்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசுப் பள்ளியை பார்வையிடச் சென்ற சமூக ஊடக அடிப்படையிலான சி.ஜே.பி. கட்சியினருக்கும் கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், கட்சியினர் மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்கள் மூலம் உருவான சி.ஜே.பி. கட்சி, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக டில்லியில் போராட்டம் நடத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை பார்வையிட்டு, அங்குள்ள உள்கட்டமைப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தும் பிரசாரத்தை கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக, ஜெய்ப்பூர் அருகே கன்வார்புராவில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியை கட்சியினர் நேற்று பார்வையிட சென்றனர்.
பள்ளி விவகாரத்தில் வாக்குவாதம்
பள்ளி செயல்படும் இடம் குறித்து கட்சியினர் கேள்வி எழுப்பினர். பள்ளி எருமை மாடுகள் அடைக்கப்படும் தொழுவம் போன்ற இடத்தில் இயங்கி வருவதாக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து பள்ளிக்குள் நுழைய அவர்கள் முயன்றபோது, அங்கிருந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பள்ளியை சீரமைப்பதற்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கற்கள் வீச்சு
வாக்குவாதம் முற்றிய நிலையில், சிலர் கட்சியினரை நோக்கி கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் கட்சியினர் வந்த கார் சேதமடைந்தது.
இந்த சம்பவத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபிஜித் தீப்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், தங்களுக்கு அந்தக் கட்சியினரின் உதவி தேவையில்லை என்றும், அவர்கள் கிராமத்தில் தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அக்கட்சி மீது பல்வேறு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார்.
