ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக விசாரணை தொடக்கம்
மும்பை: 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக மும்பை போலீசார் ‘இன் ஆப்சென்டியா’ எனப்படும், தலைமறைவாக உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு காரணமாக இருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், ஜாகிர்-உர்-ரெஹ்மான் லக்வி, சஜித் மிர், அபு அல்-கமா, அபு கஹாபா மற்றும் அப்துல் ரெஹ்மான் பாஷா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள 6 பேர்
இந்த ஆறு பேரும் தற்போது பாகிஸ்தானில் இருப்பதாகவும், இந்திய நீதிமன்றத்தில் இதுவரை நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அவர்கள் இல்லாத நிலையில் வழக்கை முன்னெடுக்கும் வகையில் மும்பை போலீசார் ‘இன் ஆப்சென்டியா’ விசாரணையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளனர்.
விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் பட்சத்தில் சட்டப்படி தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
பஹல்காம் வழக்கிலும் ஹபீஸ் சயீத் மீது வாரன்ட்
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
