விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: கடந்த சில ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பல்வேறு சாதனைகளையும் பதிவு செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் உள்ள தனது அலுவலகத்தில் 20 விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, விண்வெளித் தொழில்நுட்பத்தை விவசாயம், கால்நடை மேலாண்மை, பால்வளம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயுமாறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இளம் தொழில்முனைவோருக்கு பாராட்டு
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், சவால்கள் நிறைந்த விண்வெளித் துறையில் துணிச்சலுடன் களமிறங்கியுள்ள இளம் தொழில்முனைவோர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை நம்பி, தங்களது முயற்சிகளில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இந்த முயற்சிகளின் விளைவாக கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் துறை வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், பல்வேறு முக்கிய சாதனைகளை படைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி தொழில்நுட்பத்தின் புதிய பயன்பாடுகள்
சந்திப்பின்போது விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கமளித்தன.
மேலும், விண்வெளித் துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் தங்களது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியாக அமைந்துள்ளன என்பதையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
விவசாயம் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை பல்வேறு துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் இந்தியாவுக்கு வாய்ப்பு
எதிர்கால இந்தியாவின் திறன்களை வளர்த்தெடுக்கும் விண்வெளி ஸ்டார்ட்அப்களின் பயணத்தில் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
விண்வெளித் துறையில் புதுமையான தொழில்நுட்பங்களையும், வணிக ரீதியாக புதிய தீர்வுகளையும் உலகிற்கு வழங்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
