ராகுல் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த யூடியூபர்களுக்கு பணம்? – பாஜ குற்றச்சாட்டு
புதுடில்லி: புனேயில் நடைபெற உள்ள ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த, இன்புளூயன்சர்கள் எனப்படும் சமூக ஊடக பிரபலங்களுக்கு தலா ரூ.25,000 வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
புனேயில் உள்ள கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி ராகுல் காந்தியின் ‘சத்ரோன் கி கஞ்ச்’ (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு போலீசார் 30 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் அதிகளவில் பிரபலப்படுத்துவதற்காக யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக இன்புளூயன்சர்களுக்கு காங்கிரஸ் தரப்பில் தலா ரூ.25,000 வழங்கப்படுவதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றை பாஜ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த உரையாடலில், காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் சமூக ஊடக பிரபலத்தை தொடர்புகொண்டு ராகுல் காந்தியின் நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் முன்னிலைப்படுத்துமாறு கேட்டுக் கொள்வதாகவும், பயணச் செலவுகளுக்காக ரூ.25,000 வழங்கப்படும் என உறுதியளிப்பதாகவும் பாஜ தெரிவித்துள்ளது.
இந்த உரையாடலை ஆதாரமாகக் குறிப்பிட்டு காங்கிரஸை விமர்சித்துள்ள பாஜ, ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு மக்கள் ஆதரவை கூட பணம் கொடுத்து பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சாடியுள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் தலைமையின் பலவீனத்தை இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாகவும் பாஜ விமர்சித்துள்ளது. தேர்தல் தோல்விகளின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்பும் ராகுல், தனது நிகழ்ச்சிக்கு ஆதரவை பெறுவதற்கே பணம் வழங்கும் நிலைக்கு வந்துள்ளதாகவும் பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
