ராஞ்சி: மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசு ரத்து செய்த அரசு பணியாளர் தேர்வுக்கு, மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது ஜார்க்கண்ட் அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ராஞ்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் (JPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணி முதல்நிலை தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, JSSC நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை ரத்து செய்வதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்தது.
இதனுடன், JPSC நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணி முதல்நிலை தேர்வையும் ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது. மேலும், 2014-ம் ஆண்டு முதல் ‘டி.எஸ்.ஆர். டேட்டா பிராசசிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற வெளி நிறுவனத்தால் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவு செய்தது.
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மாணவர்களின் ஒரு தரப்பினர் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். அதேநேரத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,000-க்கும் மேற்பட்டோர் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வுகளை ரத்து செய்யும் அரசின் முடிவுக்கு எதிராக ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்வுகளை ரத்து செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. இதனால், தேர்வு ரத்து விவகாரத்தில் ஜார்க்கண்ட் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
