ராஞ்சி: தேர்வு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மற்றும் தொடர் மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில், ஜார்க்கண்டில் ஜே.பி.எஸ்.சி. மற்றும் ஜே.எஸ்.எஸ்.சி. அமைப்புகள் நடத்திய 44 தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான தேர்வுகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, தலைநகர் ராஞ்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.
மாணவர் போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர் அமைப்பின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ கடந்த 1-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஜே.எஸ்.எஸ்.சி. நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்தது.
இதற்கிடையில், அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்தது அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேர்வு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் மற்றும் சி.ஐ.டி., எஸ்.ஐ.டி. விசாரணைகளின் அடிப்படையில், ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 44 தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது.
அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்
ஜே.பி.எஸ்.சி., ஜே.எஸ்.எஸ்.சி. தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு நடைமுறைகளை கண்காணிக்க உள் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறைகளில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விரிவான ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கவுஷல் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழுவில் பிற அரசு அதிகாரிகளுடன், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் இயக்குநரும் இடம்பெற உள்ளார்.
இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும் என ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.
