பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திடம் மீண்டும் சமர்ப்பித்துள்ளது.
மேகதாது பகுதியில் அணை அமைக்கும் நடவடிக்கைகளை கர்நாடக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மேகதாது அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, கர்நாடக அரசு தனது திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறி, மத்திய நீர் ஆணையம் திட்ட அறிக்கையை கர்நாடக அரசிடம் திருப்பி அனுப்பியது. இதையடுத்து, திட்ட அறிக்கையில் தேவையான மாற்றங்களை மேற்கொண்ட கர்நாடக அரசு, தற்போது திருத்தப்பட்ட அறிக்கையை மீண்டும் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
மேகதாது குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், திட்டத்துக்கான அடுத்தகட்ட அனுமதிகளை பெறுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
இதற்கிடையே, கர்நாடக முதல்வர் சிவக்குமார் தலைமையில் நேற்று மாலை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் என். செல்லுவராயசாமி, நீர்வளத்துறை செயலாளர், வனத்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, திட்டத்துக்கு தேவையான வனத்துறை அனுமதிகளை தாமதமின்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அணை கட்டப்பட உள்ள பகுதியில் அகற்றப்பட வேண்டிய மரங்கள், மாற்று நிலம் ஒதுக்கீடு மற்றும் விதிகளின்படி புதிய மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வனத்துறை அனுமதிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் செல்லுவராயசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு மேகதாது திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், தமிழக அரசு இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்து காவிரி கரையோர மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
