சென்னை: குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை, வெளியிடப்பட்ட இரண்டாவது நாளிலேயே வாபஸ் பெறப்பட்டுள்ளது.
அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், இடதுசாரி கட்சிகள் மற்றும் சில அரசியல் அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற போராட்டங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பங்கேற்று வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் தொடங்கியதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், போராட்டங்களில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பப்பட்டது. தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அரசுக்கு ஆதரவாக உள்ள சில இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த 17-ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தமிழக உயர்கல்வித்துறை 19-ம் தேதி வாபஸ் பெற்றுள்ளது.
இதன் மூலம், மாணவர்கள் குறிப்பிட்ட அரசியல் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வெளியான இரண்டாவது நாளிலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது.
