புதுடில்லி: சமூக வலைதளங்களில் மத்திய அரசு துறைகள் தொடர்பாக பரவும் போலியான, தவறாக வழிநடத்தும் தகவல்களுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில், ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறையிலும் QRT எனப்படும் விரைவு பதில் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பான தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவுவதால், அவற்றை உடனடியாக சரிபார்த்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிப்பதே இந்த குழுக்களின் முக்கிய நோக்கமாகும்.
எப்படி செயல்படும்?
ஒவ்வொரு அமைச்சகம் மற்றும் துறையின் சமூக வலைதள, டிஜிட்டல் ஊடக குழுக்கள் தொடர்ந்து பதிவுகளை கண்காணிக்கும். அதில் போலியானது, திரிக்கப்பட்டது அல்லது தவறான பின்னணியில் வெளியிடப்பட்ட தகவல் கண்டறியப்பட்டால், அது சம்பந்தப்பட்ட QRT குழுவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அந்த துறையின் பணிகள் மற்றும் திட்டங்களை நன்கு அறிந்த அதிகாரிகள் தகவலை விரைவாக சரிபார்த்து, உண்மை நிலையை தயாரிப்பார்கள். பின்னர் தேவையான விளக்கம் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக வெளியிடப்படும்.
உதாரணமாக, மின்சாரத் துறை குறித்த தவறான தகவல் என்றால் அந்தத் துறையின் அதிகாரிகளே அதை சரிபார்ப்பார்கள். உரம், வர்த்தகம் உள்ளிட்ட பிற துறைகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும்.
ஏற்கனவே PIB-யின் உண்மை கண்டறியும் பிரிவு செயல்பட்டு வரும் நிலையில், புதிய QRT குழுக்கள் அதற்கு மாற்றாக அல்லாமல், துறை சார்ந்த தகவல்களை விரைவாக சரிபார்க்கும் கூடுதல் அமைப்பாக செயல்பட உள்ளன.
PIB-யுடன் ஒருங்கிணைப்பு
தேவைப்படும் நேரங்களில் QRT குழுக்கள் PIB உண்மை கண்டறியும் பிரிவுடன் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
