சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள ரத்தீஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் மது கொள்முதல், விற்பனை மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில் முக்கிய தகவல்கள்
கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான ரத்தீஷ் ராஜூ உள்ளிட்டோர் முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி விசாகனும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 பேர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரத்தீஷ் ராஜூ தலைமறைவாக இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ்
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 17ம் தேதி ரத்தீஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் பட்சத்தில் அவரை கைது செய்வதற்காகவும் இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரத்தீஷ் ராஜூவை கைது செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
