புதுடில்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தீவிரமானது என்றால், விசாரணை அமைப்புகள் ஏன் அமைதியாக உள்ளன என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த விக்னேஷ் ஷிஷிர், ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றம்சாட்டி, விசாரணை நடத்தக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ராகுல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து டில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வாதம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்றும், சிபிஐ புகாரை ஆய்வு செய்ததைத் தவிர வேறு நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.
விசாரணை அமைப்புகள் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, இந்த விவகாரத்தில் விசாரணை அமைப்புகளுக்கு தற்போது எந்தப் பங்கும் இல்லை என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி மோகனா, “இது தீவிரமான வழக்கு என்றால், விசாரணை அமைப்பு அமைதியாக இருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பினார். மேலும், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க வேண்டுமா என்றும் விசாரணை அமைப்புகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு தடை
தொடர்ந்து உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை எந்தவொரு விசாரணை அறிக்கையையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அல்லது உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும், வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 20 வரை அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
