புதுடில்லி: பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்ற மரபுகளுக்கு ஒவ்வாத வகையில் பேசியதாக கூறப்படும் புகார் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு லோக்சபா உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பொதுத்தேர்வு திருத்த மசோதா கடந்த மாதம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்குப் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றுள்ளது.
உரிமை மீறல் புகார்
இந்த மசோதா மீதான விவாதத்தின்போது, ராகுல் காந்தி மத்திய அமைச்சர் அமித் ஷாவை நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு ஒவ்வாத மற்றும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்ததாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 30ஆம் தேதி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் உரிமை மீறல் புகார் அளித்தார்.
இதற்கு முன்னதாக, கடந்த 29ஆம் தேதி மசோதா மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வாலும் புகார் அளித்திருந்தார்.
ராகுலிடம் விளக்கம் கேட்பு
அனுராக் தாக்கூர் அளித்த புகாரை பரிசீலித்த லோக்சபா உரிமை மீறல் குழு, இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 28ஆம் தேதிக்குள் தனது பதிலை அளிக்க வேண்டும் என ராகுல் காந்தியிடம் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
