மதுரை: உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என நிர்வாக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெசிஜீவபிரியா, சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் வந்தே மாதரம் பாடல் அல்லது இசைக்கப்பட்டு, தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சி நிரலில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து கோரிக்கை
உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகே தொடங்குவது வழக்கம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு பெருமையின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, சுதந்திர தின விழா நிகழ்ச்சி நிரலிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிர்வாக நீதிபதி உறுதி
இதையடுத்து, அனைத்து வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகளும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த நிர்வாக நீதிபதி, சுதந்திர தின விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என உறுதியளித்ததாக எம்.எம்.பி.ஏ. தலைவர் அருள்வடிவேல் (எ) சேகர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கொடியேற்றும் நிகழ்வில் மாநில அரசு பின்பற்றும் நடைமுறையை உறுதி செய்யுமாறு தலைமை நீதிபதி ஏற்கனவே அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதே நடைமுறை உயர்நீதிமன்றத்திலும் பின்பற்றப்படும் என நிர்வாக நீதிபதி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
